Tuesday, August 4, 2009

தேவை ஒரு நல்ல தலைவன் !


ஒரு நாட்டையோ அல்லது மாநிலத்தையோ பொதுவாக.. ஒரு நிலப்பகுதியை ஆள்வதற்கான தகுதி என்ன? அதாவது.. ஒரு நல்ல அரசியல்வாதிக்கான தகுதி என்ன?

நாம் இந்தியர் என்பதாலும், தமிழில் எழுதுவதாலும் நமது சூழலையே அலசுவோம்..
ஆளவேண்டும் என்று நினைக்கும் நிலப்பகுதியைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் அறிந்திருக்க வேண்டும். அல்லது அவற்றை அறிந்தோரை உடன் வைத்திருக்க வேண்டும்.

பொது அறிவு:


ஓர் மாநிலம் இந்தியாவில் உள்ளது என்பதால் இந்திய அரசியல் சட்டங்கள் மற்றும் வரலாறு அறிந்திருக்க வேண்டும். மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை, அவற்றின் கலாச்சாரம், கனிம வளம், விளை  பொருட்கள், எவ்வித பொருட்களுக்காக வேறு மாநிலங்களின் அல்லது இறக்குமதியை சார்ந்திருக்கிறது, அம்மாநிலத்திலுள்ள வரலாற்று சிறப்பிடங்கள், சுற்றுலாத்தலங்கள், போக்குவரத்து வசதி, எந்தெந்த துறைகளில் முன்னேற்றம் தேவை போன்ற விவரங்கள், கல்விக்கூடங்களைப் பற்றிய விவரங்கள் ஆகியவற்றை தனது மாநில அளவிலாவது அறியும் வாய்ப்புள்ளவராக இருக்க வேண்டும்.

அரசியல் அறிவு:


முக்கிய கட்சிகள், மக்கள் நலம் பேணும் கட்சிகள், முன்னாளில் பல நலத்திட்டங்கள் கொண்டு வந்த கட்சிகள், அந்தத் தலைவர்கள், மக்கள் செல்வாக்கு, மத்தியில் ஆளும் கட்சியுடன் மாநிலக் கட்சிகளின் நிலைப்பாடு, கேடு விளைவிக்கும் சமூக விரோத சக்திகள் முதலியவற்றையும் அறிந்திருக்க வேண்டும்.

இதுவரை கூறப்பட்டவை அறிந்திருக்க வேண்டிய விவரங்கள் மட்டுமே! ஆனால் அதை விட செயல்பாடு முக்கியம்! ஒரு நல்ல அரசியல் தலைவர் என்ன செய்ய வேண்டும் அல்லது எவற்றைப் பெற்றிருக்க வேண்டும்?

தலைமை ஏற்கும் திறமை அதாவது தன்னைச் சார்ந்த தொண்டர்களுக்கோ மக்களுக்கோ சரியான பிரதிநிதியாக அமைதல். தனது சொந்த கருத்துக்களை பின்தள்ளி, தான் தலைமை வகிக்கும் கூட்டத்தின் ஒரு மனதான கருத்துக்க்களை முன்னிறுத்துதல். அவர்களின் அறியாமையைக் களைந்து , அவர்களின் நிலைப்பாட்டை அவர்களுக்கு உணர்த்துதல். அதாவது அவர்களது நிறைகுறைகளை சுட்டிக்காட்டுதல்(எ.கா. நிறை: ஒற்றுமை, குறை: சீண்டி விட்டு வேடிக்கை பார்ப்போரை ஒதுக்காமல் உணர்ச்சி வசப்படுதல்).

தனது பேச்சு அல்லது வாதத்திறமையால் எதிராளியை தோற்கடிக்காமல் தன கருத்துக்களை வலியுறுத்தி, தன பக்க நியாயங்கள் , நற்தகுதிகள், நற்செயல்களைப் பதமாக விளம்பரப்படுத்துதல். இத்தகைய பேச்சால் அம்மாநில மக்கள் மட்டுமின்றி, பிற மாநிலங்கள், மத்திய அரசு மற்றும் வெளிநாடுகளின் பாராட்டைப்பெறுதல் .

செய்ய வேண்டியவை:

தலைவனே அனைத்து வேலைகளையும், துறைகளையும் கண்காணிக்க முடியாது. ஒரு நல்ல தலைவன் அந்தந்த துறைக்கு ஏற்ற திறமையான வல்லுனர்களைப் பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும்.( எ. கா. கல்வித்துறை ஓர் சிறந்த பல்கலைக்கழகத்தில் தகுதி அடிப்படையில் முனைவர் பட்டம் பெற்ற கல்வியாளரால் வழி நடத்தப்பட வேண்டும்) அந்தந்த துறையைக் கண்காணித்து, ஆலோசனைகள் மட்டும் வழங்கி அந்த வல்லுனர்கள் திறம்பட செயல் பட இடமளிக்க வேண்டும்.

ஒவ்வோர் துறையிலும் அடிமட்டம் முதல் மேல் மட்டம் வரை சரியாக செயல்படுகிறதா என்று மாதம் ஒரு முறையேனும் அமைச்சர்களும், சட்ட மன்ற உறுப்பினர்களும் நேரில் சென்று மக்களை சந்தித்தும் , அலுவலகங்களை பார்வையிட்டும் சரிபார்க்க வேண்டும்.
கல்விமட்டுமின்றி, விளையாட்டுத்துறையிலும் மாநில அளவில் ஊக்கம் அளிக்கப்படவேண்டும்.



உடல் நலம், மருத்துவம் ப்பற்றிய விழிப்புணர்வு சிறுவர்களிடமும், மக்களிடமும், ஏற்படுத்தப்பட வேண்டும். ஆள்வோருக்கு மட்டுமே பாதுகாப்பு என்ற நிலை மாறி மக்கள் காவலுக்காக காவல் துறை பணிகள் முடுக்கி விடப்பட வேண்டும்.


பெட்ரோல்,தங்கம், உணவுப்பொருட்கள் போன்றவற்றின் விலை நிர்ணயம் குறித்த விளக்கங்கள் ஊடகங்கள் மூலம் மக்களுக்கு விளக்கப்பட வேண்டும். வானொலி, தொலைகாட்சி போன்றவற்றில் வெளியிடப்படும் கருத்துக்கள், விளம்பரங்களின் நம்பகத்தன்மை பரிசீலிக்கப்பட வேண்டும்.

மேல் கூறியவற்றை செயல்படுத்தும் ஆற்றல் ஒரு நாட்டை ஆள்பவருக்கு இருக்க வேண்டும்.

இவை ஒரு சில தகுதிகள் மட்டுமே ! மற்றபடி தனது மாநில அல்லது தனது நாட்டு மக்கள் அனைவரின் அன்றாட வாழ்க்கை மற்றும் அவர்களின் பிரச்சினைகளை கருத்தில் கொண்டே ஆட்சி நடத்தி சட்டங்கள் இயற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவரே சிறந்த தலைவராகவோ, அரசியல்வாதியாகவோ திகழ முடியும்.

இக்கருத்தை ஏற்றுக்கொள்வோர் தொடர்ந்து படிக்கவும்...

மேல் கூறியவற்றுள் சில தகுதிகள் கூட இல்லாது, வருடத்திற்கு ஒருவராவது புதிய கட்சியுடன், "நானும் தலைவன்" என்று கிளம்பிவிடுகிறார்கள். ஏதாவது ஒரு துறையில் புகழ் பெற்று ஒரு அடையாளம் பெற்றுவிட்டால் மட்டுமே நல்ல தலைவராகி விட முடியாது. மக்களுக்கு அவர்களை அவர்கள் துறையில் பிடிக்கிறது. ஒரு தலைவராக அல்ல! இதனை அவர்கள் உணர்கிறார்களோ இல்லையோ.. மக்களாகிய நாம் உணர வேண்டும்!



தான் எவற்றை செயல் படுத்த வேண்டும் என்ற தெளிவும், அதற்கேற்ற அறிஞர்களின் துணையும்,உதவியும் பெற முடிந்தவரே நல்ல தலைவராகி நினைத்ததை சாதிக்க முடியும். சாதித்தவர்களின் வரலாறே அதற்கு சாட்சி ! இனியேனும் விழித்துக் கொள்வோம் !


6 comments:

Jai T said...

Firstly ... nice thoughts really..

உங்களின் ஏக்கம் புரிகிறது..இருந்தும் என்ன செய்ய? இவற்றோடு தான் நாம் வாழ வேண்டி இருக்கிறது.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்... இந்த பாடல் தான் நினைவுக்கு வருகிறது...சோகத்தோடு...

TBD said...

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு சுட்டிகள் பார்த்த உணர்வு வருகிறது. நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதுங்க.

Unknown said...

//உடல் நலம், மருத்துவம் ப்பற்றிய விழிப்புணர்வு சிறுவர்களிடமும், மக்களிடமும், ஏற்படுத்தப்பட வேண்டும். ஆள்வோருக்கு மட்டுமே பாதுகாப்பு என்ற நிலை மாறி மக்கள் காவலுக்காக காவல் துறை பணிகள் முடுக்கி விடப்பட வேண்டும்//


உண்மை தான். இது பால பருவத்தில் பள்ளியிலேயே ஆரம்பிக்க பட வேண்டும். மேலும் பெட்டோர்களிடமும் அறிவொழி இயக்கத்தை தீவிர படுத்த வேண்டும். நம் சமூகத்தில் உள்ள சாதி சமய ஏற்ற தாழ்வுகளால் சரி பாதி மக்கள் இன்னும் அறியாமை என்னும் இருட்டிலேயே வைக்க பாட்டுளார்கள். அவர்களை மீட்டு எடுத்தால் தான் நமக்கு தீர்வு. அரசிற்கு இதில் நிறைய பொறுப்பு உள்ளது.

Unknown said...

//மேல் கூறியவற்றுள் சில தகுதிகள் கூட இல்லாது, வருடத்திற்கு ஒருவராவது புதிய கட்சியுடன், "நானும் தலைவன்" என்று கிளம்பிவிடுகிறார்கள். ஏதாவது ஒரு துறையில் புகழ் பெற்று ஒரு அடையாளம் பெற்றுவிட்டால் மட்டுமே நல்ல தலைவராகி விட முடியாது. மக்களுக்கு அவர்களை அவர்கள் துறையில் பிடிக்கிறது. ஒரு தலைவராக அல்ல! இதனை அவர்கள் உணர்கிறார்களோ இல்லையோ.. மக்களாகிய நாம் உணர வேண்டும்!//


இதில் மேலும் ஒரு வரவு இளைய தளபதி :(

PK said...

Thats very idealistic...IMHO vast majority of power/positions goes to those who seek it. Our present PM types happen very rarely.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

சிங்கப்பூர் போன்ற நாடுகள் முன்னேறியது இந்தக் காரணங்களால்தான்.

Post a Comment