Monday, March 29, 2010

வெற்றியின் ரகசியம்







எனது முந்தைய பதிவான "இன்றைய  தேர்வுகள்" படித்த பின்பு இந்தப பதிவைப் படிக்கவும்.


அதில் பயிற்சி வகுப்புகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தோம்( coaching classes). ஒரு தேர்வில் வெற்றி பெற முடியாது என்று நினைப்பவர்கள் இந்த பயிற்சி வகுப்பின் மூலம் பயிற்றுவிக்கப்படுவார்கள். இது காட்டுவது என்னவென்றால் அவர் அந்தத் தகுதியை இயற்கையைப் பெறவில்லை, அவ்வாறு பெற்றவர்களுக்கு இந்தப் பயிற்சி  தேவைப்பட்டிராது !


இருக்கும் திறமைக்குப் பட்டை தீட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தலாம்... அந்தத் திறமை மேன்மை பெறுவதற்கு. ஆனால் தேர்வு பெறுவதே கடினம் என்பவருக்கு பயிற்சி கொடுத்து ஒரு பதவியைக்கொடுப்பதோ, அல்லது ஒரு படிப்புக்கான நுழைவை உறுதி செய்வதோ, பின்னர் அவருக்கே தாங்க முடியாத சுமையாகிவிடும்  !


முக்கியமாக பெற்றோரின் விருப்பத்திற்காக குழந்தைகளை எந்த ஒன்றையும் கற்றுக்கொள்ள வற்புறுத்துதல் கூடாது. அது இசையோ, நடனமோ, எதிர்காலப் படிப்பினைப் பற்றிய முடிவோ , அந்தக் குழந்தையின் திறமைகள், எதில் அவர்களால் மனம் ஒன்றி ஈடுபட்டு வெற்றி பெற முடியும் போன்றவற்றைக் கண்டறிந்து அதில் அவர்களுக்கு பயிற்சி அளித்தால் அதில் கண்டிப்பாக அவர்கள் பெரும் பெயர் பெறுவார்கள், ஏனெனில் அது அவர்கள் விரும்பி செய்யும் ஒரு செயலாகவே இருப்பதால்....அவர்கள் மீது திணிக்கப் பட்ட வெறும் வற்புறுத்தலாக இல்லாததால்! எதற்காக இந்த வகுப்ப்புகுப் போகிறோம் என்றே தெரியாமல் காலையும், மாலையும் பல வகுப்புகளுக்குப் போகும் பல குழந்தைகளை என்னைச் சுற்றிப் பார்க்கிறேன் !






நான் கூறும் உண்மைகளை கொஞ்சம் அசை போட்டுப் பாருங்கள்....


தனி மனிதர்கள் ஒரு குடும்பத்தை உருவாக்குகிறார்கள். குடும்பங்கள் ஒரு சமுதாயத்தை உருவாக்குகின்றன. எனவே, யார் நமக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர், யார் நமது கட்டடங்களை, பாலங்களை, அணைகளை  கட்டும் பொறியாளர், யார் நமது வாகனங்களை வடிவமைக்கப் போகிறார், யார் நமது உணவுப் பொருட்ட்களை விளைவிக்கப்போகிறார், என்பதை  எல்லாம் நாம் தான் தீர்மானிக்கிறோம் ! இவர் காரணம், அவர் காரணம் என்று கூறுவதை விடுத்துப் பாப்போம்.




மற்றவர் மீது அக்கறையும், உடலையும், மருந்துகளையும் ஆரியிந்து அறியும் ஆற்றல் பெற்ற ஒருவர் மருத்துவர் ஆகட்டும்.


கட்டிடங்கள் மற்றும் கட்டடக்கலை மீது ஆர்வம் கொண்டுள்ள ஒருவர் கட்டிடம் கட்டும் பொறியாளராகட்டும்   .


பகுத்தைவுத் திறனும், தீர்வுகளை விரைவாகக் காணும் திறனும் கொண்டவர் மென் பொருள்  கணினிப் பொறியாளர் ஆகட்டும்.


பயிர்களின் மீது ஆர்வம் கொண்டவர் விவசாயத்தைத் தொழிலை ஏற்கட்டும்.


எந்திரங்களின் மீது ஆர்வம் கொண்ட ஒருவர் எந்திரவியல் பொறியாளர் ஆகட்டும்.


நாம் லல்லு பிரசாத்தை விண்வெளி ஆராய்ச்சி ஆளராகவும் , நீல் ஆம்ச்டிராங்கை அரசியல்வாதியாகவும் நாம் வற்புறுத்தாமல் இருந்தோமேயானால், நமது சமுதாயம் அணித்துத் துறைகளிலும் சிறந்த வல்லுனர்கலப் பெற்று விளங்கும். எனது வாதம் தங்களுக்குப் புரியுமென்று நம்புகிறேன் !





  

ஒரு நல்ல மருத்துவர் முதல் சோதனையின் போதே நோயாளியைப் பற்றியும், அவரது நோயின் குணம் மற்றும் தீவிரம் அறிந்து , அந்த நோயாளியின் உடலுக்குக் கேடு விளைவிக்காமல்  நோயை  குணப்படுத்தும் மருந்தை அளிப்பார். விருப்பமின்றி மருத்துவராக வேண்டும் என்ற கட்டாயத்தினால் மருத்துவரான இன்னொருவரும் அதே நோய்க்கான  மருந்துகள் அளிப்பார், ஆனால் அது இந்த நோயாளியின் உடலுக்கு எந்த அளவிற்குப பொருந்தும் என்பதை ஆராயாமல் கொடுப்பார். இதனால் நோய் குணமானாலும், பக்க விளைவுகள் ஏற்படும். இதனால் அவர் நல்ல மருத்துவர் என்ற பெயரை எடுப்பது கடினம்.

இது அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.






அறிவாளியான ஒருவர் துறை "" வை விரும்பினாலும், அவரை துறை " " வில் நன்றாக பயிற்றுவிக்க முடியும், அதில் அவர் சம்பாதிக்கவும் முடியும். ஆனால் அந்தத் துறையை விரும்பி பணி புரிபவரை விட இவருக்கு அந்தத்துறையில் ஜெயிப்பது மிகவும் கடினமாக இருக்கும். அதாவது நடிகர் 'விஜய்' ஓவியர் ' டா வின்சி' ஆவது போலவும், 'டெண்டுல்கர்' பின்னணிப் பாடகர் ஆவது போலவும் !




அதனால், நாம் நமது குழந்தைகளை அவர்களுக்கு விருப்பமான துறையிலோ, கலையிலோ சாதிக்க வைப்போம்... அவர்களுக்குப் பரிச்சயம் இல்லாத விஷயத்தைப் புதியதாய் அவர்கள் மீது திணிப்பதை விட, அவர்களுக்குள் புதைந்து கிடைக்கும் திறமைகளைக்கண்டரிந்து பட்டை தீட்டுவோம் .

இது தான் அவர்களது எதிகால "வெற்றியின் ரகசியம் "!

தேர்வுகள் இன்று ....


சோதனை என்பது என்ன? ஒருவரது திறனை சோதிக்கும் முறை. அது பள்ளித்தேர்வாக இருக்கலாம், கல்லூரித்தேர்வாக இருக்கலாம், வேலைக்கான எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வாக இருக்கலாம் அல்லது நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகளில் ஏற்படும் சோதனைகளாகவும் இருக்கலாம். இவை அனைத்துமே ஒருவர் அடுத்து அடைய விரும்பும் இடத்திற்குச் செல்ல அவர் தகுதியானவர் தானா என்பதை நிர்ணயிக்கின்றன. ஒப்புக்கொள்வீர்கள் தானே?


இந்த வலைப்பூவின் குறிக்கோள் நிலவும் உண்மை நிலையை உணர்த்துவதே ஆகும். முதன் முதலில் ஒருவர் தேர்வுகளை சந்திக்கும் இடத்தில்.... அதாவது பள்ளிகளில் என்ன நடக்கின்றது? ஒரு வருடத்திற்கான பாடம் மாணவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அந்த வகுப்பு மாணவர்கள் அந்த ஆண்டு இறுதிக்குள் அந்த பாடத்தைக் கற்று முடித்திருக்க வேண்டும். எதற்கென்றால் அந்தப்பாடத்தில் தேர்ச்சி பெற்றால் தான் அவர்கள் அடுத்த வகுப்பில், அதற்க்கு அடுத்த நிலையிலுள்ள பாடத்தை புரிந்துகொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, முதல் வகுப்பில் கூட்டலை சரியாகப் புரிந்து கொண்டால் மட்டுமே ஒரு மாணவன் இரண்டாம் வகுப்பில் பெருக்கல் கற்றுக்கொள்ள முடியும்.

ஆனால் பெரும்பாலான வகுப்புகளில், பள்ளிகளில், ஏன் வீடுகளிலும் கூட ஆசிரியர்களும், பெற்றோரும் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்காகவே படிக்க வேண்டும் என்கின்றனர்.  மேலும் ஒரு மாணவன் 90%க்கு மேல் மதிப்பெண் எடுப்பவராயின், அவரை பெற்றோர் வகுப்பில் முதலாவதாக வர வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். ஆனால் கற்றுக்கொள்ளும் திறன், நினைவாற்றல் போன்றவை ஒவ்வொரு மாணவருக்கும் மாறுபடும். ஆனால் முதலாவதாக வர முடியவில்லை என்றால் அந்த மாணவர்களுக்குள் நீ பெரியவனா, நான் பெரியவளா என்ற வயதுக்குத்தேவயற்ற போட்டி, வெறுப்பு, பொறாமை போன்ற எண்ணங்கள் மேலோங்குகின்றன. நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து, இறுதியில் வேறு ஏதோ வேண்டாத விளைவை ஏற்படுத்தி விட்டோம் ! முதல் மதிப்பெண் என்பது அவ்வளவு முக்கியமா? மாணவனுக்கு பாடம் புரிந்ததா என்பது தானே முக்கியம்?



இது நடப்பது பள்ளிகளில் மட்டுமல்ல, தேர்வுகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் தான் ! மேற்படிப்புக்கான தேர்வுகள், நேர்முகத்தேர்வுகள், அரசாங்க அலுவலகருக்கான தேர்வுகள் அனைத்திற்குமே பயிற்சி வகுப்புகள் வந்துவிட்டன. பயிற்சி வகுப்புகளுக்கு சென்றவர்கள், அதற்குச் செல்லாதவர்களைவிட தேர்வடையும் வாய்ப்பினை அதிகம் பெறுகிறார்கள்.(  பயிற்சிக்கு செல்லாமைக்கு ஏழ்மை, கிராமப்புறத்தில் வாழ்தல், சமூகக் காரணங்கள் போன்ற பல உள்ளன..).

எவ்வளவு தெரிந்திருக்கிறது என்பதை சோதிப்பதற்குத் தேர்வுகள் என்பது போய், தேர்வுகளுக்காகவே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நிலை வந்து விட்டது!. இந்த கேள்வி தேர்விற்கு வரும்.... இது முக்கியமான கேள்வி...., இது போன்ற வாக்கியங்களை நாம் கேள்விப்படாத பள்ளிகளோ, வகுப்புகளோ இல்லை என்றே கூறலாம். இதுவா தேர்வுகள் வைப்பதற்கான நோக்கம்??!! இதைத்தான் நான் இந்தப் பதிவில் கூற விரும்புகிறேன்!


எனவே அனைவரும், முக்கியமாகப் பெற்றோர் தேர்வுகள் பற்றி புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தை புரிந்து பாடங்களை அறிந்துகொள்ளட்டும். மனனம் செய்து மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள். புரிந்து கொள்ளாமல் எப்படி மதிப்பெண் எடுக்க முடியும் என்று சிலர் வாதிடலாம்.. அந்த வாதம், கணிதம், அறிவியல் போன்ற பாடங்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால் வரலாறு, புவியியல் மற்றும் மொழிப் பாடங்களுக்குப் பொருந்தாது.(ஆமாம்.. அந்தப் பாடங்களை யார் மதிக்கிறார்கள்? எனும் குரல் எனக்கும் கேட்கிறது! டிஸ்கவரி, நேஷனல் ஜாகரபிக் சானல், அனிமல் பிளானட் போன்ற அலைவரிசைகளை கவனித்தீர்களானால் புரியும்... அதில் வருபவர்களைப்போல புகழ்பெறக் காத்திருப்பது உங்கள் குழந்தையாகக்கூட இருக்கலாம்!)

இதனைப் பற்றி நான் இவ்வளவு கூறுவது எனது சொந்த அனுபவத்தினாலும், என்னைச் சுற்றி உள்ளோரின் அனுபவங்களையும் வைத்துதான். அதனால் இது வெறும் பேச்சு அல்ல!



பலருக்கு இக்கருத்துக்கள் ஏற்கனவே தெரிந்தவையாக இருக்கலாம். அதைப்பற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவ்வாறு சில மனிதர்களுடன் ஏற்பட்ட உரையாடலின் விளைவு தான் இந்தப் பதிவு! ஆனால் இவ்வாறு தேர்வுகளைப் பற்றி யோசிக்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் இப்போது தயவு கூர்ந்து யோசிக்கலாமே... உங்கள் குழந்தை 100% மதிப்பெண் வாங்க எண்ணட்டும்.. ஆனால் அது 100% புரிதலுடன் இருக்க வேண்டும் என்பதே நான் கூற விரும்புவது. உடன் பயில்வோருடனான போட்டிக்காக அது இருக்கக்கூடாது!.

இவ்வாறு புரிந்து படித்து தேர்வுகளை எதிர் கொண்டால்... தங்கள் குழந்தை எந்தப் பாடத்தில் ஆர்வமுள்ளவர் என்பதும், எதில் சிறந்து விளங்க முடியும் என்பதும் தானே தெளிவாகும். வாழ்வில் வெற்றிபெறுபவராக உங்கள் பிள்ளை விளங்குவது நிச்சயம்!


இதன் தொடர்புடைய எனது மற்றொரு பதிவான " வெற்றியின்  ரகசியம் " படியுங்கள்...

வாழ்த்துக்கள்.. பிள்ளைகளுக்கும்... பெற்றோருக்கும் !

Thursday, October 22, 2009

'ஈரம்' என்றொரு படம்..








'பேய் படம்',' திகில் படம் ' என்று முத்திரை குத்தப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்தப் படம். என்னால் இதனை இந்த வரையரைக்குள் பார்த்து திருப்தி அடைய முடியவில்லை. எனது கண்ணோட்டத்தை உங்கள் பார்வைக்கு அளிக்கிறேன். என் மனதில் பதிந்த பல விஷயங்கள் இப்படத்தில் முக்கியத்துவம் பெற்றிருப்பதே அதற்குக் காரணம். அவற்றை உங்களுடன் பகிர்வதில் ஆனந்திக்கிறேன்...


1. ஈரமில்லா மனிதர்கள்

தனக்கென்று ஒரு பிரச்சனை வருகையில் எப்படி மனிதர்கள் மனதில் ஈரமி
ல்லாமல் மாறிவிடுகிறார்கள் என்பதை பக்கத்து வீட்டுக்காரர்கள் கதாபாத்திரங்கள் மூலம் விளக்கியிருந்தார் இயக்குனர். கலியுகத்தின் மக்களைப்பற்றி புராணங்களில் தீய குணங்கள் மேலோங்கி இருக்குமெனக் கூறி இருப்பார்கள். அந்த அடுக்கு மாடிக் குடியிருப்புப் பெண்ணும், பெரியவரும், அடுதவர் குடும்பத்தைக் கெடுக்கிறோமே என்ற குற்ற உணர்வில்லாத காவலாளி, நண்பர், விடலைப்பெண் என்று அனைத்துக் கதாபாதிரங்களுமே இன்றைய வாழ்வில் நாம் காணும் அத்தகைய மனிதர்களின் பிரதிபலிப்பாகவே அமைகின்றனர்.நமது பிரச்சினைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகின்றன. ஆனால் அப்பிரச்சினைகளில் மற்ற மனிதர்களின் பங்கு இப்படத்தில் தோன்றுபவர்களைப் போன்றே இருக்கின்றது.


2. வாழ்க்கைத்துணையின் மீதான சந்தேகம்





இயக்குனர் இந்தப் படத்தில் கூற வந்த கருத்து... கணவர்களின் சந்தேகம் பற்றியது. ஒரு பெண் அறிவு முதிர்ச்சி அடையாத, மனம் தடுமாறும் இளம் பருவத்தில் காதல் வயப்பட்டிருக்கலாம் அல்லது முதிர்ச்சியுடன் கூடிய காதலாக இருந்ததாலேயே பல வே
று முக்கிய காரணங்களுக்காக அந்தக் காதலைத் துறந்திருக்கலாம். ஒரு காலத்தில் ஒருவனைக் காதலித்ததால் மட்டுமே அவள் தவறான பெண்ணாக முடியாது. நல்ல காதலிகள் மிகவும் குறைவு தான் ! ஏனெனில், நல்ல மகள்களும், நல்ல மனைவிகளும், நல்ல தாய்மார்களும் உருவாக பல கெட்ட காதலிகள் தேவைப்படுகிறார்கள். ஒரு கெட்ட காதலி உங்களுக்குச் சிறந்த மனைவியாக விளங்கிக்கொண்டிருக்கிறாள் என்பதை உங்கள் இருவருக்குமிடையே உள்ள உறவை வைத்துத் தீர்மானியுங்கள். மற்ற உறவுகள் அல்லது நண்பர்களின் வார்த்தைகளை வைத்து அல்ல என்பதை இயக்குனர் ஆணித்தரமாக வலியுறுத்தி இருக்கிறார்.

3. கதாநாயகி


ரம்யா, இந்தக் கதையின் நாயகி. மனசாட்சிக்குக் கட்டுப்பட்டவள். அன்புக்குக் கட்டுப்பட்டவள். அதனாலேயே தந்தைக்குக் கட்டுப்பட்டவள். சுருக்க
மாக மிகவும் நல்லவள். பிறர் தன்னை ஒரு வார்த்தை தவறாகப் பேசிவிடக்கூடாது என்ற நன்னடத்தை கொண்டவள்.கோபத்தில் தன்னைக் காதலன் தவறாக ஒரு வார்த்தை பேசியதால் அந்த ஒன்றுக்காகவே காதலை விடுத்தவள். ஆங்கிலத்தில் கூறவேண்டுமென்றால்: A soft girl with a very strong positive character. இதனாலேயே இந்தப் பாத்திரப் படைப்பு என்னை மிகவும் கவர்ந்தது . நம்மைச் சுற்றி பல நல்ல பெண்கள் இருந்தாலும் ரம்யாவின் அளவு உறுதியும், தெளிவும் உள்ளதா என்பது என்னை யோசிக்க வைத்த விஷயம். தான் தவறானவள் அல்ல என்பதை நிரூபித்த விதம் சினிமாத்தனமாக இருந்தாலும் அவளது குணத்தை ஒட்டியே அமைந்ததால் படத்திற்கு அதுவே மதிப்பைக் கூட்டுகிறது. 

4. கதாநாயகன்

வாசு எனும் போலீஸ் அதிகாரி வாசுதேவன். இந்தக் கதையின் முக்
கியமான தூண். இப்படத்தின் பிரதானமான கதாபாத்திரம். காவல்துறை அதிகாரி ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழும் துடிப்பான இளைஞன்.அமைதியும், அழகும், குணமும் ஒரு சேர அமைந்த ரம்யாவை விரும்பிக்காதலிப்பவன். ( ஆங்கிலத்தில் கூறவேண்டுமென்றால்: Someone who not only just loves Ramya, but admires her for her character).கோபத்தில் தன்னை விட்டுப் பிரிந்தாலும் , அவள் கோபத்திலுள்ள நியாயத்தை மதிப்பவன். பிணமாக வளைக் கண்டபின்னும், அவள் தன முன்னாள் காதலி என்பது தெரிந்தால் அவளுக்கு அவப்பெயர் வரக்கூடும் என்று அவளைத் தெரியாது என்று கூறுவதும், பின்னர் அவளது மரணம் கொலை அல்ல என்று ஊர்ஜிதம் செய்யாமல் போனால், அது அவளுக்கும், தன காதலுக்கும் செய்யும் துரோகம் என்று எண்ணி அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதும் அவன் ரம்யாவின் மீது கொண்ட ஆழமான அன்பிற்குச் சான்றுகள்.


  எந்த அடிப்படையோ, ஆதாரங்களோ இன்றி, தான் ரம்யாவின் மீது கொண்ட நம்பிக்கையை மட்டுமே கொண்டு வழக்கை விசாரிப்பது அவன் மீதான மதிப்பை மேலும் கூட்டுவதாக அமைகிறது. மரணங்கள் தண்ணீரால் ஏற்படுகின்றன என்பதையும், மரணமடைவோர் ரம்யாவின் சாவிற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று முடிவெடுப்பதிலும் அறிவுக்கூர்மை உள்ளவனாக மிளிர்கிறான். தன்னை வெறுப்பவராக இருந்தாலும் ரம்யாவின் தந்தையின் சிகிச்சைக்கு உதவுவதும், ரம்யாவின் தங்கையைக் காக்க முனைவதிலும் மனிதாபிமானமுள்ள மனிதனாகக் காணப்படுகிறான். மொத்தத்தில் வெறும் சேட்டைகள் புரியும் சினிமாக் கதாநாயகர்கள்போலல்லாமல் உண்மையான, கதைக்கேற்ற எதார்த்த நாயகன் இந்த வாசுதேவன்.


5. திரைக்கதை


திகில் கதையாக இருந்தாலும், சொல்லப்பட்ட விதம் புதுமையானது. கோரம், மாயாஜாலமின்றி ஓர் யதார்த்தமான ஆவியைப் பார்க்க முடிந்தது. திரைக்கதை கூறப்பட்ட விதம் பாராட்டப் படவேண்டியது.


இன்றைய நாளில், வாசு ஏற்கனவே அறிமுகமான ரம்யாவை( ரம்யாவின் பிணத்தைப்) பார்த்து 'தெரியாது' என்று கூறுவது போல் ஒரு காட்சி. தொடரும் பழைய நினைவுகளில், ஏற்கனவே தெரியாத ரம்யாவைத் ' தெரியும் ' என்று கூறி ஒரு இக்கட்டில் இருந்து அவளைக் காப்பாற்ற, அதன் மூலமே அவர்கள் நட்பு தோன்றுவது போன்ற காட்சி. இது போலவே ஐஸ்கிரீம் பார்லர், சாப்பாடு, திருச்சியின் தில்லை நகர் என்று இந்நாளின் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வாசுவின் பழைய நினைவுகளைக் கூறுவதும் நல்ல திரைக்கதை அமைப்பு.


சிவப்பு, தண்ணீர் இவற்றை வாசு பார்க்க நேரிட்டால் ஆவியால் மரணம் நிகழும் திரைக்கதையில், படம் முடிவடையும் நேரத்தில் சிவப்புக் குடையும், அதிலிருந்து சொட்டும் மழைத்துளிகளும் ஆவியின் அடுத்த பலியைக் குறிப்பால் மட்டுமே உணர்த்தி முடித்துவிடுகிறார் இயக்குனர்.


ஒரு நல்ல படத்தைப் பார்த்த உணர்வு வந்தது நீண்ட நாட்களுக்குப் பிறகு !





Tuesday, August 4, 2009

தேவை ஒரு நல்ல தலைவன் !


ஒரு நாட்டையோ அல்லது மாநிலத்தையோ பொதுவாக.. ஒரு நிலப்பகுதியை ஆள்வதற்கான தகுதி என்ன? அதாவது.. ஒரு நல்ல அரசியல்வாதிக்கான தகுதி என்ன?

நாம் இந்தியர் என்பதாலும், தமிழில் எழுதுவதாலும் நமது சூழலையே அலசுவோம்..
ஆளவேண்டும் என்று நினைக்கும் நிலப்பகுதியைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் அறிந்திருக்க வேண்டும். அல்லது அவற்றை அறிந்தோரை உடன் வைத்திருக்க வேண்டும்.

பொது அறிவு:


ஓர் மாநிலம் இந்தியாவில் உள்ளது என்பதால் இந்திய அரசியல் சட்டங்கள் மற்றும் வரலாறு அறிந்திருக்க வேண்டும். மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை, அவற்றின் கலாச்சாரம், கனிம வளம், விளை  பொருட்கள், எவ்வித பொருட்களுக்காக வேறு மாநிலங்களின் அல்லது இறக்குமதியை சார்ந்திருக்கிறது, அம்மாநிலத்திலுள்ள வரலாற்று சிறப்பிடங்கள், சுற்றுலாத்தலங்கள், போக்குவரத்து வசதி, எந்தெந்த துறைகளில் முன்னேற்றம் தேவை போன்ற விவரங்கள், கல்விக்கூடங்களைப் பற்றிய விவரங்கள் ஆகியவற்றை தனது மாநில அளவிலாவது அறியும் வாய்ப்புள்ளவராக இருக்க வேண்டும்.

அரசியல் அறிவு:


முக்கிய கட்சிகள், மக்கள் நலம் பேணும் கட்சிகள், முன்னாளில் பல நலத்திட்டங்கள் கொண்டு வந்த கட்சிகள், அந்தத் தலைவர்கள், மக்கள் செல்வாக்கு, மத்தியில் ஆளும் கட்சியுடன் மாநிலக் கட்சிகளின் நிலைப்பாடு, கேடு விளைவிக்கும் சமூக விரோத சக்திகள் முதலியவற்றையும் அறிந்திருக்க வேண்டும்.

இதுவரை கூறப்பட்டவை அறிந்திருக்க வேண்டிய விவரங்கள் மட்டுமே! ஆனால் அதை விட செயல்பாடு முக்கியம்! ஒரு நல்ல அரசியல் தலைவர் என்ன செய்ய வேண்டும் அல்லது எவற்றைப் பெற்றிருக்க வேண்டும்?

தலைமை ஏற்கும் திறமை அதாவது தன்னைச் சார்ந்த தொண்டர்களுக்கோ மக்களுக்கோ சரியான பிரதிநிதியாக அமைதல். தனது சொந்த கருத்துக்களை பின்தள்ளி, தான் தலைமை வகிக்கும் கூட்டத்தின் ஒரு மனதான கருத்துக்க்களை முன்னிறுத்துதல். அவர்களின் அறியாமையைக் களைந்து , அவர்களின் நிலைப்பாட்டை அவர்களுக்கு உணர்த்துதல். அதாவது அவர்களது நிறைகுறைகளை சுட்டிக்காட்டுதல்(எ.கா. நிறை: ஒற்றுமை, குறை: சீண்டி விட்டு வேடிக்கை பார்ப்போரை ஒதுக்காமல் உணர்ச்சி வசப்படுதல்).

தனது பேச்சு அல்லது வாதத்திறமையால் எதிராளியை தோற்கடிக்காமல் தன கருத்துக்களை வலியுறுத்தி, தன பக்க நியாயங்கள் , நற்தகுதிகள், நற்செயல்களைப் பதமாக விளம்பரப்படுத்துதல். இத்தகைய பேச்சால் அம்மாநில மக்கள் மட்டுமின்றி, பிற மாநிலங்கள், மத்திய அரசு மற்றும் வெளிநாடுகளின் பாராட்டைப்பெறுதல் .

செய்ய வேண்டியவை:

தலைவனே அனைத்து வேலைகளையும், துறைகளையும் கண்காணிக்க முடியாது. ஒரு நல்ல தலைவன் அந்தந்த துறைக்கு ஏற்ற திறமையான வல்லுனர்களைப் பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டும்.( எ. கா. கல்வித்துறை ஓர் சிறந்த பல்கலைக்கழகத்தில் தகுதி அடிப்படையில் முனைவர் பட்டம் பெற்ற கல்வியாளரால் வழி நடத்தப்பட வேண்டும்) அந்தந்த துறையைக் கண்காணித்து, ஆலோசனைகள் மட்டும் வழங்கி அந்த வல்லுனர்கள் திறம்பட செயல் பட இடமளிக்க வேண்டும்.

ஒவ்வோர் துறையிலும் அடிமட்டம் முதல் மேல் மட்டம் வரை சரியாக செயல்படுகிறதா என்று மாதம் ஒரு முறையேனும் அமைச்சர்களும், சட்ட மன்ற உறுப்பினர்களும் நேரில் சென்று மக்களை சந்தித்தும் , அலுவலகங்களை பார்வையிட்டும் சரிபார்க்க வேண்டும்.
கல்விமட்டுமின்றி, விளையாட்டுத்துறையிலும் மாநில அளவில் ஊக்கம் அளிக்கப்படவேண்டும்.



உடல் நலம், மருத்துவம் ப்பற்றிய விழிப்புணர்வு சிறுவர்களிடமும், மக்களிடமும், ஏற்படுத்தப்பட வேண்டும். ஆள்வோருக்கு மட்டுமே பாதுகாப்பு என்ற நிலை மாறி மக்கள் காவலுக்காக காவல் துறை பணிகள் முடுக்கி விடப்பட வேண்டும்.


பெட்ரோல்,தங்கம், உணவுப்பொருட்கள் போன்றவற்றின் விலை நிர்ணயம் குறித்த விளக்கங்கள் ஊடகங்கள் மூலம் மக்களுக்கு விளக்கப்பட வேண்டும். வானொலி, தொலைகாட்சி போன்றவற்றில் வெளியிடப்படும் கருத்துக்கள், விளம்பரங்களின் நம்பகத்தன்மை பரிசீலிக்கப்பட வேண்டும்.

மேல் கூறியவற்றை செயல்படுத்தும் ஆற்றல் ஒரு நாட்டை ஆள்பவருக்கு இருக்க வேண்டும்.

இவை ஒரு சில தகுதிகள் மட்டுமே ! மற்றபடி தனது மாநில அல்லது தனது நாட்டு மக்கள் அனைவரின் அன்றாட வாழ்க்கை மற்றும் அவர்களின் பிரச்சினைகளை கருத்தில் கொண்டே ஆட்சி நடத்தி சட்டங்கள் இயற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவரே சிறந்த தலைவராகவோ, அரசியல்வாதியாகவோ திகழ முடியும்.

இக்கருத்தை ஏற்றுக்கொள்வோர் தொடர்ந்து படிக்கவும்...

மேல் கூறியவற்றுள் சில தகுதிகள் கூட இல்லாது, வருடத்திற்கு ஒருவராவது புதிய கட்சியுடன், "நானும் தலைவன்" என்று கிளம்பிவிடுகிறார்கள். ஏதாவது ஒரு துறையில் புகழ் பெற்று ஒரு அடையாளம் பெற்றுவிட்டால் மட்டுமே நல்ல தலைவராகி விட முடியாது. மக்களுக்கு அவர்களை அவர்கள் துறையில் பிடிக்கிறது. ஒரு தலைவராக அல்ல! இதனை அவர்கள் உணர்கிறார்களோ இல்லையோ.. மக்களாகிய நாம் உணர வேண்டும்!



தான் எவற்றை செயல் படுத்த வேண்டும் என்ற தெளிவும், அதற்கேற்ற அறிஞர்களின் துணையும்,உதவியும் பெற முடிந்தவரே நல்ல தலைவராகி நினைத்ததை சாதிக்க முடியும். சாதித்தவர்களின் வரலாறே அதற்கு சாட்சி ! இனியேனும் விழித்துக் கொள்வோம் !