Monday, March 29, 2010

வெற்றியின் ரகசியம்







எனது முந்தைய பதிவான "இன்றைய  தேர்வுகள்" படித்த பின்பு இந்தப பதிவைப் படிக்கவும்.


அதில் பயிற்சி வகுப்புகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தோம்( coaching classes). ஒரு தேர்வில் வெற்றி பெற முடியாது என்று நினைப்பவர்கள் இந்த பயிற்சி வகுப்பின் மூலம் பயிற்றுவிக்கப்படுவார்கள். இது காட்டுவது என்னவென்றால் அவர் அந்தத் தகுதியை இயற்கையைப் பெறவில்லை, அவ்வாறு பெற்றவர்களுக்கு இந்தப் பயிற்சி  தேவைப்பட்டிராது !


இருக்கும் திறமைக்குப் பட்டை தீட்ட பயிற்சி வகுப்புகள் நடத்தலாம்... அந்தத் திறமை மேன்மை பெறுவதற்கு. ஆனால் தேர்வு பெறுவதே கடினம் என்பவருக்கு பயிற்சி கொடுத்து ஒரு பதவியைக்கொடுப்பதோ, அல்லது ஒரு படிப்புக்கான நுழைவை உறுதி செய்வதோ, பின்னர் அவருக்கே தாங்க முடியாத சுமையாகிவிடும்  !


முக்கியமாக பெற்றோரின் விருப்பத்திற்காக குழந்தைகளை எந்த ஒன்றையும் கற்றுக்கொள்ள வற்புறுத்துதல் கூடாது. அது இசையோ, நடனமோ, எதிர்காலப் படிப்பினைப் பற்றிய முடிவோ , அந்தக் குழந்தையின் திறமைகள், எதில் அவர்களால் மனம் ஒன்றி ஈடுபட்டு வெற்றி பெற முடியும் போன்றவற்றைக் கண்டறிந்து அதில் அவர்களுக்கு பயிற்சி அளித்தால் அதில் கண்டிப்பாக அவர்கள் பெரும் பெயர் பெறுவார்கள், ஏனெனில் அது அவர்கள் விரும்பி செய்யும் ஒரு செயலாகவே இருப்பதால்....அவர்கள் மீது திணிக்கப் பட்ட வெறும் வற்புறுத்தலாக இல்லாததால்! எதற்காக இந்த வகுப்ப்புகுப் போகிறோம் என்றே தெரியாமல் காலையும், மாலையும் பல வகுப்புகளுக்குப் போகும் பல குழந்தைகளை என்னைச் சுற்றிப் பார்க்கிறேன் !






நான் கூறும் உண்மைகளை கொஞ்சம் அசை போட்டுப் பாருங்கள்....


தனி மனிதர்கள் ஒரு குடும்பத்தை உருவாக்குகிறார்கள். குடும்பங்கள் ஒரு சமுதாயத்தை உருவாக்குகின்றன. எனவே, யார் நமக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர், யார் நமது கட்டடங்களை, பாலங்களை, அணைகளை  கட்டும் பொறியாளர், யார் நமது வாகனங்களை வடிவமைக்கப் போகிறார், யார் நமது உணவுப் பொருட்ட்களை விளைவிக்கப்போகிறார், என்பதை  எல்லாம் நாம் தான் தீர்மானிக்கிறோம் ! இவர் காரணம், அவர் காரணம் என்று கூறுவதை விடுத்துப் பாப்போம்.




மற்றவர் மீது அக்கறையும், உடலையும், மருந்துகளையும் ஆரியிந்து அறியும் ஆற்றல் பெற்ற ஒருவர் மருத்துவர் ஆகட்டும்.


கட்டிடங்கள் மற்றும் கட்டடக்கலை மீது ஆர்வம் கொண்டுள்ள ஒருவர் கட்டிடம் கட்டும் பொறியாளராகட்டும்   .


பகுத்தைவுத் திறனும், தீர்வுகளை விரைவாகக் காணும் திறனும் கொண்டவர் மென் பொருள்  கணினிப் பொறியாளர் ஆகட்டும்.


பயிர்களின் மீது ஆர்வம் கொண்டவர் விவசாயத்தைத் தொழிலை ஏற்கட்டும்.


எந்திரங்களின் மீது ஆர்வம் கொண்ட ஒருவர் எந்திரவியல் பொறியாளர் ஆகட்டும்.


நாம் லல்லு பிரசாத்தை விண்வெளி ஆராய்ச்சி ஆளராகவும் , நீல் ஆம்ச்டிராங்கை அரசியல்வாதியாகவும் நாம் வற்புறுத்தாமல் இருந்தோமேயானால், நமது சமுதாயம் அணித்துத் துறைகளிலும் சிறந்த வல்லுனர்கலப் பெற்று விளங்கும். எனது வாதம் தங்களுக்குப் புரியுமென்று நம்புகிறேன் !





  

ஒரு நல்ல மருத்துவர் முதல் சோதனையின் போதே நோயாளியைப் பற்றியும், அவரது நோயின் குணம் மற்றும் தீவிரம் அறிந்து , அந்த நோயாளியின் உடலுக்குக் கேடு விளைவிக்காமல்  நோயை  குணப்படுத்தும் மருந்தை அளிப்பார். விருப்பமின்றி மருத்துவராக வேண்டும் என்ற கட்டாயத்தினால் மருத்துவரான இன்னொருவரும் அதே நோய்க்கான  மருந்துகள் அளிப்பார், ஆனால் அது இந்த நோயாளியின் உடலுக்கு எந்த அளவிற்குப பொருந்தும் என்பதை ஆராயாமல் கொடுப்பார். இதனால் நோய் குணமானாலும், பக்க விளைவுகள் ஏற்படும். இதனால் அவர் நல்ல மருத்துவர் என்ற பெயரை எடுப்பது கடினம்.

இது அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.






அறிவாளியான ஒருவர் துறை "" வை விரும்பினாலும், அவரை துறை " " வில் நன்றாக பயிற்றுவிக்க முடியும், அதில் அவர் சம்பாதிக்கவும் முடியும். ஆனால் அந்தத் துறையை விரும்பி பணி புரிபவரை விட இவருக்கு அந்தத்துறையில் ஜெயிப்பது மிகவும் கடினமாக இருக்கும். அதாவது நடிகர் 'விஜய்' ஓவியர் ' டா வின்சி' ஆவது போலவும், 'டெண்டுல்கர்' பின்னணிப் பாடகர் ஆவது போலவும் !




அதனால், நாம் நமது குழந்தைகளை அவர்களுக்கு விருப்பமான துறையிலோ, கலையிலோ சாதிக்க வைப்போம்... அவர்களுக்குப் பரிச்சயம் இல்லாத விஷயத்தைப் புதியதாய் அவர்கள் மீது திணிப்பதை விட, அவர்களுக்குள் புதைந்து கிடைக்கும் திறமைகளைக்கண்டரிந்து பட்டை தீட்டுவோம் .

இது தான் அவர்களது எதிகால "வெற்றியின் ரகசியம் "!

தேர்வுகள் இன்று ....


சோதனை என்பது என்ன? ஒருவரது திறனை சோதிக்கும் முறை. அது பள்ளித்தேர்வாக இருக்கலாம், கல்லூரித்தேர்வாக இருக்கலாம், வேலைக்கான எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வாக இருக்கலாம் அல்லது நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகளில் ஏற்படும் சோதனைகளாகவும் இருக்கலாம். இவை அனைத்துமே ஒருவர் அடுத்து அடைய விரும்பும் இடத்திற்குச் செல்ல அவர் தகுதியானவர் தானா என்பதை நிர்ணயிக்கின்றன. ஒப்புக்கொள்வீர்கள் தானே?


இந்த வலைப்பூவின் குறிக்கோள் நிலவும் உண்மை நிலையை உணர்த்துவதே ஆகும். முதன் முதலில் ஒருவர் தேர்வுகளை சந்திக்கும் இடத்தில்.... அதாவது பள்ளிகளில் என்ன நடக்கின்றது? ஒரு வருடத்திற்கான பாடம் மாணவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அந்த வகுப்பு மாணவர்கள் அந்த ஆண்டு இறுதிக்குள் அந்த பாடத்தைக் கற்று முடித்திருக்க வேண்டும். எதற்கென்றால் அந்தப்பாடத்தில் தேர்ச்சி பெற்றால் தான் அவர்கள் அடுத்த வகுப்பில், அதற்க்கு அடுத்த நிலையிலுள்ள பாடத்தை புரிந்துகொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, முதல் வகுப்பில் கூட்டலை சரியாகப் புரிந்து கொண்டால் மட்டுமே ஒரு மாணவன் இரண்டாம் வகுப்பில் பெருக்கல் கற்றுக்கொள்ள முடியும்.

ஆனால் பெரும்பாலான வகுப்புகளில், பள்ளிகளில், ஏன் வீடுகளிலும் கூட ஆசிரியர்களும், பெற்றோரும் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்காகவே படிக்க வேண்டும் என்கின்றனர்.  மேலும் ஒரு மாணவன் 90%க்கு மேல் மதிப்பெண் எடுப்பவராயின், அவரை பெற்றோர் வகுப்பில் முதலாவதாக வர வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். ஆனால் கற்றுக்கொள்ளும் திறன், நினைவாற்றல் போன்றவை ஒவ்வொரு மாணவருக்கும் மாறுபடும். ஆனால் முதலாவதாக வர முடியவில்லை என்றால் அந்த மாணவர்களுக்குள் நீ பெரியவனா, நான் பெரியவளா என்ற வயதுக்குத்தேவயற்ற போட்டி, வெறுப்பு, பொறாமை போன்ற எண்ணங்கள் மேலோங்குகின்றன. நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து, இறுதியில் வேறு ஏதோ வேண்டாத விளைவை ஏற்படுத்தி விட்டோம் ! முதல் மதிப்பெண் என்பது அவ்வளவு முக்கியமா? மாணவனுக்கு பாடம் புரிந்ததா என்பது தானே முக்கியம்?



இது நடப்பது பள்ளிகளில் மட்டுமல்ல, தேர்வுகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் தான் ! மேற்படிப்புக்கான தேர்வுகள், நேர்முகத்தேர்வுகள், அரசாங்க அலுவலகருக்கான தேர்வுகள் அனைத்திற்குமே பயிற்சி வகுப்புகள் வந்துவிட்டன. பயிற்சி வகுப்புகளுக்கு சென்றவர்கள், அதற்குச் செல்லாதவர்களைவிட தேர்வடையும் வாய்ப்பினை அதிகம் பெறுகிறார்கள்.(  பயிற்சிக்கு செல்லாமைக்கு ஏழ்மை, கிராமப்புறத்தில் வாழ்தல், சமூகக் காரணங்கள் போன்ற பல உள்ளன..).

எவ்வளவு தெரிந்திருக்கிறது என்பதை சோதிப்பதற்குத் தேர்வுகள் என்பது போய், தேர்வுகளுக்காகவே தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நிலை வந்து விட்டது!. இந்த கேள்வி தேர்விற்கு வரும்.... இது முக்கியமான கேள்வி...., இது போன்ற வாக்கியங்களை நாம் கேள்விப்படாத பள்ளிகளோ, வகுப்புகளோ இல்லை என்றே கூறலாம். இதுவா தேர்வுகள் வைப்பதற்கான நோக்கம்??!! இதைத்தான் நான் இந்தப் பதிவில் கூற விரும்புகிறேன்!


எனவே அனைவரும், முக்கியமாகப் பெற்றோர் தேர்வுகள் பற்றி புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தை புரிந்து பாடங்களை அறிந்துகொள்ளட்டும். மனனம் செய்து மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள். புரிந்து கொள்ளாமல் எப்படி மதிப்பெண் எடுக்க முடியும் என்று சிலர் வாதிடலாம்.. அந்த வாதம், கணிதம், அறிவியல் போன்ற பாடங்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். ஆனால் வரலாறு, புவியியல் மற்றும் மொழிப் பாடங்களுக்குப் பொருந்தாது.(ஆமாம்.. அந்தப் பாடங்களை யார் மதிக்கிறார்கள்? எனும் குரல் எனக்கும் கேட்கிறது! டிஸ்கவரி, நேஷனல் ஜாகரபிக் சானல், அனிமல் பிளானட் போன்ற அலைவரிசைகளை கவனித்தீர்களானால் புரியும்... அதில் வருபவர்களைப்போல புகழ்பெறக் காத்திருப்பது உங்கள் குழந்தையாகக்கூட இருக்கலாம்!)

இதனைப் பற்றி நான் இவ்வளவு கூறுவது எனது சொந்த அனுபவத்தினாலும், என்னைச் சுற்றி உள்ளோரின் அனுபவங்களையும் வைத்துதான். அதனால் இது வெறும் பேச்சு அல்ல!



பலருக்கு இக்கருத்துக்கள் ஏற்கனவே தெரிந்தவையாக இருக்கலாம். அதைப்பற்றி நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவ்வாறு சில மனிதர்களுடன் ஏற்பட்ட உரையாடலின் விளைவு தான் இந்தப் பதிவு! ஆனால் இவ்வாறு தேர்வுகளைப் பற்றி யோசிக்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் இப்போது தயவு கூர்ந்து யோசிக்கலாமே... உங்கள் குழந்தை 100% மதிப்பெண் வாங்க எண்ணட்டும்.. ஆனால் அது 100% புரிதலுடன் இருக்க வேண்டும் என்பதே நான் கூற விரும்புவது. உடன் பயில்வோருடனான போட்டிக்காக அது இருக்கக்கூடாது!.

இவ்வாறு புரிந்து படித்து தேர்வுகளை எதிர் கொண்டால்... தங்கள் குழந்தை எந்தப் பாடத்தில் ஆர்வமுள்ளவர் என்பதும், எதில் சிறந்து விளங்க முடியும் என்பதும் தானே தெளிவாகும். வாழ்வில் வெற்றிபெறுபவராக உங்கள் பிள்ளை விளங்குவது நிச்சயம்!


இதன் தொடர்புடைய எனது மற்றொரு பதிவான " வெற்றியின்  ரகசியம் " படியுங்கள்...

வாழ்த்துக்கள்.. பிள்ளைகளுக்கும்... பெற்றோருக்கும் !